தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம் ராஜகண்ணப்பன் பங்கேற்பு
சாத்தான்குளத்தில் நடந்த தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
சாத்தான்குளம்,
தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்‘ என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்த பிரசார கூட்டம் சாத்தான்குளத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோசப், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், நகர செயலாளர் மகா இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும் என்றார். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசும்போது, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.
மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ் ராஜசிங், மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் பிரிட்டோ, நயினார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.ஜெகன், பூபதி, ஒன்றிய பொருளாளர் வேல்துரை, நகர பொருளாளர் சந்திரன், மகளிர் அணி துணை அமைப்பாளர் சோமசுந்தரி, நகர அமைப்பாளர் ஜோதி ஸ்டான்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ள கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகளால் மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நீட் போன்ற தேர்வுகளால் மாணவர்களின் உயிர் பறிபோவதோடு, எண்ணற்ற மாணவர்களின் வருங்காலம் பாதிக்கப்படுகிறது. கல்வித்திட்டங்கள் மற்றும் பாடங்களை மாற்றுவதன் மூலம் கல்வியில் வகுப்புவாதத்தை மறைமுகமாக திணிக்க மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது. மத்திய, மாநில அரசுகளின் மாணவர்கள் விரோத போக்கை தி.மு.க. மாணவரணியினர் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். 2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு, கல்வி கட்டணங்கள் ரத்து செய்யப்படும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களில் மாணவரணி பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும். மேலும் மாணவரணியினர் கொடியேற்று விழா, விளையாட்டு போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தி, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்‘ என்றார்.
கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் எம்.பி.முகைதீன், ஆலாவுதீன், ஜான்பாண்டியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story