மழை வெள்ளத்தால் 1,226 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் - அதிகாரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 1,226 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன் கூறினார்.
ஸ்பிக்நகர்,
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தோட்டக்கலை பயிர்களை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் அத்திமரப்பட்டியில் ஆய்வு செய்தபோது, வாழை தோட்டங்களில் தேங்கி இருக்கும் மழைநீரை உடனடியாக மின்மோட்டார் மூலமாக வெளியேற்றும்படி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் பெலிஸ்டின் என்ற மருந்தை 2 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வாழையின் வேர்ப்பகுதியில் ஊற்றினால் அவை மேலும் பாதிக்கப்படாமல் காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். இதேபோல் வெங்காயம், கொத்தமல்லி போன்ற பயிர்கள் சேதம் அடையாமல் பாதுகாக்க குறிப்பிட்ட மருந்துகளை தெளிக்கும்படியும் தெரிவித்தார்.
பின்னர் கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் 20 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. விளாத்திகுளம், புதூர் வட்டாரங்கள் மற்றும் தூத்துக்குடி வட்டாரத்தில் அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேதம் அடைந்து உள்ளன. முள்ளக்காடு, கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாழை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பின்படி புரெவி புயலின்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 1,226 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. தொடர்ந்து கிராமங்கள் தோறும் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயல் போன்ற அசாதாரண சூழ்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
கடலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்த பிறகே பாதிப்பு குறித்து முழுமையாக தெரியவரும். கணக்கெடுப்பு பணிகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குனர் சபீனா, துணை அலுவலர் ஜெபதுரை உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story