வி.வி.தாங்கல் ரெயில்வே சுரங்க நடைபாதையில் கால்வாய்போல் தேங்கும் மழைநீர்; ஆம்புலன்ஸ் செல்வதற்கும் சிக்கல்


தண்ணீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் விளைபொருட்களை மறுபகுதிக்கு கொண்டு செல்ல முடியாமலும் அவதிக்குஆளாகியுள்ளனர்
x
தண்ணீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் விளைபொருட்களை மறுபகுதிக்கு கொண்டு செல்ல முடியாமலும் அவதிக்குஆளாகியுள்ளனர்
தினத்தந்தி 12 Dec 2020 1:30 AM IST (Updated: 12 Dec 2020 12:36 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே வி.வி.தாங்கல் கிராமத்தில் ரெயில்வே சுரங்க நடைபாதையில் கால்வாய் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாய்போல் தேங்கிய மழைநீர்
கண்ணமங்கலத்தை அடுத்த ஒண்ணுபுரம் ஊராட்சியை சேர்ந்தது வி.வி.தாங்கல் கிராமம். இங்கு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. வி.வி.தாங்கல் கிராமத்துக்கு செல்லும் வழியில் காட்பாடி-விழுப்புரம் ரெயில்வே டிராக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. சுரங்க நடைபாதைக்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

தற்போது பெய்த தொடர் மழையால் சுரங்க நடைபாதை முழுவதும் கால்வாய்போல் தணணீர் தேங்கி, வாகனங்களோ, பொது மக்களோ செல்ல முடியவில்லை. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ரெயில்வே தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி சென்று வருகின்றனர். அவசர மருத்துவ உதவி பெற ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை.

அகற்றவேண்டும்
வி.வி.தாங்கல் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்லவும், வெளியூர் நபர்கள் இவ்வூருக்கு வரவும் முடியவில்லை. ரெயில்வே நிர்வாகம் சுரங்க நடைபாதையில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற மோட்டார் வசதி செய்திருந்தாலும், அதை இயக்குவதற்கு ஆளில்லை.

மேலும் இந்தப்பகுதியில் உள்ள மலையில் கல்குவாரி உள்ளது. அந்த கல்குவாரிக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி இந்த வழியாக செல்வதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே ஆட்டோ ஓட்டுனர்கள் இவ்வூருக்கு சவாரி செல்ல மறுக்கின்றனர். அதனால் வெளியூர் சென்று, இவ்வூருக்கு இரவு நேரங்களில் வருபவர்கள் போக்குவரத்து வசதியின்றி தவிக்கின்றனர்.

எனவே சுரங்க நடைபாதை செல்லும் பாதையில் தார்சாலை வசதி செய்து தரவேண்டும். மேலும் சுரங்க நடைபாதையில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story