குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி - கலெக்டர் சமீரன் தகவல்
குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
தென்காசி,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன், அங்குள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வில் பல்வேறு சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே குற்றாலம் அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. எனினும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக குற்றாலம் நகர பஞ்சாயத்து, பழைய குற்றாலம் பஞ்சாயத்து நிர்வாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
அருவிகளில் சமூக இடைவெளியுடன் குறிப்பிட்ட அளவிலான சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் குளித்து செல்வதற்கு அனுமதிக்கலாமா? என்று பரிசீலித்து வருகிறோம். இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிப்பதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே குற்றாலம் மெயின் அருவியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, அங்குள்ள பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘குற்றாலம் அருவிகளில் குறிப்பிட்ட அளவு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது‘ என்றார்.
Related Tags :
Next Story