கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் - வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் - வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Dec 2020 4:00 AM IST (Updated: 12 Dec 2020 2:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவினால் பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு அறிவித்த தலா ரூ.1 லட்சம் நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

உலகையே அச்சுறுத்திய கொரோனா இந்தியாவிலும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் லட்சக் கணக்கானோர் தொற்றுப் பாதிப்புக்குள்ளானார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். குறிப்பாக புதுச்சேரியில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 97 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். 617 பேர் இறந்துள்ளனர். இது நமக்கு பெருத்த கவலை அளிக்கிறது. இதில் பெரும்பாலும் பல்வேறு நோய்களால் அவதிக்குள்ளான வயதானவர்கள் தான் அதிகம் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சிறு வயது, இளம் வயதினரும் தொற்று காரணமாக இறந்திருப்பது வேதனை அளிக்கிறது.

இந்த சூழ்நிலையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக மாநில அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மாநில அரசால் உறுதியளிக்கப்பட்ட போதிலும் பல மாதங்களாகியும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். எனவே இனியும் மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் அவசர கால நிதியில் இருந்தோ, முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியில் இருந்தோ இந்த தொகையினை எடுத்து தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு வழங்கிட வேண்டும். முதல்-அமைச்சர் நாராயணசாமி இதை காலம் தாழ்த்தாமல் துரிதமாக செய்திட வேண்டும். கொரோனா போன்ற மோசமான காலகட்டத்தில் தங்களது குழந்தைகள், குடும்பத்தினரைவிட்டு தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் அனைவருக்கும் கவுரவ ஊதியம் கொடுத்து நன்றி பாராட்ட வேண்டும். இதனை அரசு முக்கிய பணியாக நினைத்து செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story