கும்மிடிப்பூண்டி அருகே, ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம்-நகைகள் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மற்றும் நகைகளை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது பெரிய பொம்மாஜிகுளம் கிராமம். இங்கு வசித்து வரும் மனோகரன் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி (வயது 48). இவர் வீட்டின் முன்புறம் சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை உறவினர் ஒருவரது திருமணத்திற்காக குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று விட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு ஸ்ரீதேவி வந்தார்.
அப்போது, வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பதறியடித்து கொண்டு, உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் வீட்டின் முன்புற கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு தனியறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சம் மற்றும் 8 பவுன் நகைகளை அள்ளிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது மர்ம ஆசாமிகள், கைகளில் உறை போட்டு இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டு போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story