மனித தவறால் உயிரிழந்த பரிதாபம்: ‘நாங்களே குற்றவாளிகள், எங்களை மன்னித்துவிடு’ - உருவ பொம்மையை வைத்து காட்டெருமைக்கு அஞ்சலி
‘நாங்களே குற்றவாளிகள், தயவு செய்து எங்களை மன்னித்துவிடு’ என்ற வாசகத்துடன் உருவபொம்மையை வைத்து உயிரிழந்த காட்டெருமைக்கு புனேயில் உருக்கமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
புனே,
புனே கோத்ரூட் பகுதியில் உள்ள மகாத்மா குடியிருப்புக்குள் கடந்த புதன்கிழமை காலை காட்டெருமை ஒன்று புகுந்தது. சுமார் 6 மணி நேரம் போராடி வனத்துறையினர் அந்த காட்டெருமையை பிடித்தனர். எனினும் காட்டெருமையை பிடித்தபோது, அதுக்கு வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அது பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் காட்டெருமையை பிடிக்க கையாண்ட தவறான அணுகுமுறையே அதன் சாவுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொதுமக்கள் கூட்டமாக திரண்டு காட்டெருமையை படம் பிடித்ததையும், சிலர் மோட்டார் சைக்கிள்களில் பல கி.மீ. தூரத்திற்கு காட்டெருமையை துரத்தியதையும் காண முடிந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “காட்டெருமை சாதுவான ஒரு விலங்கினம். எனவே பொதுமக்கள் கூட்டத்தால் அது மிரண்டுபோய்விட்டது. இதனால் அது நீண்ட தூரம் ஓடியது. எனவே அதன் உடல் வெப்பநிலை அதிகரித்தது. மேலும் அதற்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது. இதனால் தான் காட்டெருமை உயிரிழந்து உள்ளது” என்றாா்.
இந்தநிலையில் புனேயை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு ஒன்று, பொதுமக்களின் தவறான அணுகுமுறையால் உயிரிழந்த காட்டெருமைக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்தி உள்ளது. அதில், அந்த அமைப்பு உயிரிழந்த காட்டெருமையின் உருவ பொம்மையை வைத்து அதன் அருகில், ‘நாங்களே குற்றவாளிகள், தயவு செய்து எங்களை மன்னித்துவிடு’ என்ற வாசகத்தை எழுதி இரங்கல் போஸ்டரையும் வைத்து உள்ளனா்.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில், “அந்த விலங்குக்கு நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், அதை பிடிக்கும் போது பொதுமக்களின் அணுகுமுறைக்கு மன்னிப்பு கேட்கும் வகையிலும் காட்டெருமையின் உருவபொம்மையை வைத்தோம்” என்றார்.
விலங்குகள் நல அமைப்பினரின் இந்த அஞ்சலி நிகழ்ச்சி, காட்டெருமையை பிடிக்க கடுமையான முறைகளை கையாண்டவர்கள், அதை துரத்தி, துரத்தி போட்டோ எடுத்தவர்கள், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் இடையே குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story