உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் கஞ்சிதொட்டி திறந்து போராட்டம்


உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் கஞ்சிதொட்டி திறந்து போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2020 4:17 PM IST (Updated: 12 Dec 2020 4:17 PM IST)
t-max-icont-min-icon

உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினார்கள்.

குண்டடம், 

குண்டடத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணைக்கு அருகே பந்தலிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாளான நேற்று கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் குடும்பத்துடன் கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றி குடித்தனர். இது குறித்து ஒரு பெண் விவசாயி கூறியதாவது.

கடந்த 25 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வேண்டி போராடி வரும் விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளுக்கு, கூட தண்ணீர் இருப்பதில்லை. மேலும் குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது, தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தும் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ள நிலையில் குண்டடம் பகுதியில் உள்ள உப்பாறு அணைக்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை, ஊரில் பல தலைமுறைகளாக வசித்து வந்த பலரும் ஊரை காலி செய்துவிட்டு விவசாயத்தை விட்டுவிட்டு திருப்பூர் கோவை பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு தினக்கூலி வேலைக்கு சென்றுவருகின்றனர்.

இருக்கும் சில விவசாயிகள் நிலத்தை காப்பாற்றி வாழ்வதற்கு வழியின்றி வாழ்ந்து வருகிறோம் இந்த சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் உப்பாறு பாசன விவசாயிகள் மீது கவனம் செலுத்தி விவசாயிகளின் போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 4-வது நாளான நேற்று கஞ்சி காய்ச்சி கஞ்சி தொட்டியில் ஊற்றி கஞ்சி குடித்து வருகிறோம் என தெரிவித்தார்.

Next Story