குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனையில் நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்வு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி


குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனையில் நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்வு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 12 Dec 2020 6:26 PM IST (Updated: 12 Dec 2020 6:26 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் காட்சி முனையில் நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

குன்னூர்,

மலைமாவட்டமான நீலகிரியில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. அதில் குன்னூர் பகுதியும் ஒன்று. இங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் டால்பின் நோஸ் என்ற இயற்கைகாட்சி முனை உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த டால்பின் நோஸ் காட்சி முனையை கண்டு களிக்க தவறுவது இல்லை. வனத்துறை சார்பில் இந்த காட்சி முனை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த காட்சி முனையில் இருந்து பார்த்தால் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற சமவெளிப் பகுதிகளும், அதன் நடுவே பாம்பு போன்று நெளிந்து செல்லும் பவானி ஆற்றையும் பார்க்க முடியும். இந்த நிலையில் கடந்த கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், இந்த காட்சிமுனையும் மூடப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 7-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் டால்பின் நோஸ் இயற்கை காட்சி முனையும் திறக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த காட்சி முனையில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் நுழைவு கட்டண தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.

அதாவது பெரியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டது ரூ.20 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.10 ஆகவும், புகைப்பட கேமராவுக்கு ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும், வீடியோ கேமராவுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, பொதுவாக கட்டணம் உயர்த்தப்படும்போது, குறைந்த அளவே அதிகரிக்கப்படும். ஆனால் இங்கு ஒரே நேரத்தில் இருமடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிகம்தான். எனவே கட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றனர்.

Next Story