திருவெண்ணெய்நல்லூரில் ரூ.3¾ கோடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டிட பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்


திருவெண்ணெய்நல்லூரில் ரூ.3¾ கோடியில் புதிய தாலுகா அலுவலகம் கட்டிட பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Dec 2020 7:08 PM IST (Updated: 12 Dec 2020 7:08 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் ரூ.3¾ கோடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிட பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர், அரசூர், சித்தலிங்கமடம் ஆகிய குறுவட்டங்களை ஒன்றாக இணைத்து திருவெண்ணெய்நல்லூரை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகத்தை உருவாக்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12.11.2019 அன்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக புதிய தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் திருவெண்ணெய்நல்லூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பதி திருமலை தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினருமான இரா.குமரகுரு தொடக்க உரையாற்றினார். மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், ஒன்றிய கல்விக்குழு தலைவரும், திருவெண்ணெய்நல்லூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான இரா.ஏகாம்பரம், திருவெண்ணெய்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காண்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும், திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ராமலிங்கம் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடியே 75 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 3 மாடி கட்டிடத்துடன் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி ஏகாம்பரம், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்த், தாசில்தார் ஆனந்தன், ஒன்றிய இணை செயலாளர் சிவகாமி முருகதாஸ், நகர செயலாளர் கேசவன், நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாலுபாஸ்கர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அரிராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் அறிவு, கூட்டுறவு சங்க தலைவர்கள் பாபு என்கிற தேவநாதன், பரிமளாகாந்தி கிருஷ்ணமூர்த்தி, சிறுமதுரை கிளைசெயலாளர் சங்கர், நகர அவைத்தலைவர் வேலாயுதம், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர் செல்வமுருகன், கூட்டுறவு சங்க துணை தலைவர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சரவணகுமார், ஊராட்சி செயலாளர்கள் ஏழுமலை, தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story