செயல் அலுவலர்களிடம் மாமூல் வசூலித்த சேலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கைது
செயல் அலுவலர்களிடம் மாமூல் வசூலித்த சேலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி இயக்குனராக கனகராஜ் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சேலம், நாமக்கல் ஆகிய 2 மாவட்டங்களுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆவார். இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஆகும். சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.
இவரது கட்டுப்பாட்டின் கீழ் 2 மாவட்டங்களில் மொத்தம் 53 பேரூராட்சி அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் துப்புரவு, குடிநீர் குழாய் பராமரித்தல், தெரு விளக்கு பராமரித்தல் ஆகிய 3 பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த பணிகளுக்கு ஆகும் செலவு தொகைக்கான பில்களுக்கு இவர்தான் கையெழுத்து போட்டு அனுமதி வழங்க வேண்டும்.
அதன்படி ஒவ்வொரு செயல் அலுவலரும் ஒவ்வொரு மாதம் கொடுக்கும் பில் தொகையில் இருந்து இவர் 5 சதவீதம் மாமூல் வசூலித்து வந்து உள்ளார். இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று சேலத்தில் இருந்து சொந்த ஊரான கோவைக்கு செல்வதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் அரியானூர் அருகே கனகராஜ் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரது 2 பைகளில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.3½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோவையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story