தேனி அருகே மிளகாய் செடிகள் வளர்ந்தும் விளைச்சல் இல்லை; தரமற்ற விதையால் விவசாயிகள் பாதிப்பு
தேனி அருகே தரமற்ற விதையால் மிளகாய் செடிகள் வளர்ந்தும் விளைச்சல் அடையாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற விதைகள்
தேனி மாவட்டத்தில் சமீப காலமாக காய்கறி விதைகள் முளைப்புத்திறன் குறைபாடு மற்றும் மகசூல் குறைபாட்டால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடமலைக்குண்டு பகுதியில் கத்தரிக்காய் செடி நன்கு வளர்ந்தும் காய்ப்புத் திறன் குறைபாடு ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில், தேனி அருகே பின்னத்தேவன்பட்டி பகுதியில் மிளகாய் செடிகளிலும் காய்ப்புத்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் 50 ஏக்கருக்கும் மேல் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் நாற்றுகள் வாங்கி நடவு செய்தனர். மிளகாய் செடிகள் நடவு செய்த 70 நாட்களில் மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஆனால், 5 மாதங்கள் ஆகியும் மகசூல் எடுக்க முடியாமல் விவசாயிகள் சிலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில செடிகள் நன்கு வளர்ந்தும், சில செடிகள் வளர்ச்சி
குறைபாட்டுடன் காணப்படுகிறது. பல ஏக்கர் பரப்பளவில் காய்ப்புத்திறன் குறைபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காய்ப்புத்திறன்
இதுகுறித்து பின்னத்தேவன்பட்டியில் மிளகாய் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயி தங்கபாண்டியிடம் கேட்டபோது, “நான் 2½ ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்துள்ளேன். 5
மாதங்களுக்கு முன்பு சுமார் 25 ஆயிரம் நாற்றுகள் வாங்கி நடவு செய்தேன். அவற்றில் சுமார் 3 ஆயிரம் நாற்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து காய்த்துள்ளன. மற்ற நாற்றுகள் வளர்ந்த போதிலும் காய்ப்புத்திறன் குறைபாடு உள்ளது. மிகக்குறைவான அளவில் காய்த்துள்ளன. பெரும்பாலான செடிகளில் காய்ப்பு பிடிக்கவில்லை. 10 சதவீத மகசூல் கூட கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பக்கத்து தோட்டங்களில் விவசாயிகள் சிலர் காய்ப்புத்திறன் இல்லாததால் அவற்றை அழித்து விட்டு மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். தரமற்ற விதைகளே இதற்கு
காரணம். குறிப்பிட்ட சில நிறுவன விதைகள் தான் இப்படி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. எனவே, இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் உரிய ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story