பிறந்த 19-வது நாளில் ஆண் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற கொடூர தந்தை கைது; உடந்தையாக இருந்த தம்பியும் சிக்கினார்
பிறந்த 19-வது நாளில் ஆண் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தம்பியும் சிக்கினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புகார்
அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா (வயது 24). இவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அந்த குழந்தை கடந்த மாதம் 22-ந் தேதி மர்மமான முறையில் இறந்துவிட்டது. இதைத்தொடர்ந்து இறந்த குழந்தையின் உடல் அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.
இதனிடையே குழந்தை இறந்ததில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மணியின் குழந்தை இறந்ததில் சந்தேகம் இருப்பதாக சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்விக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை
இதனால் குழந்தை சாவில் மர்மம் உள்ளதாக வெள்ளித்திருப்பூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து, பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட குழந்தையின் உடலை அதே இடத்திலேயே பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
கைது
இதற்கிடையே குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்றதாக மணி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி ரஞ்சித் ஆகியோர் சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி முன்பு சரண் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் வெள்ளித்திருப்பூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி ஒப்படைத்தார்.இதைத்தொடர்ந்து சரண் அடைந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்
விசாரணையில் போலீசாரிடம் மணி பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிறந்த ஆண் குழந்தையின் முகச்சாயல் என்னுடைய தம்பியின் முகச்சாயல் போன்று இருந்தது. இதனால் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தையின் மீது எனக்கு வெறுப்பு வந்தது. எனவே குழந்தையை கொல்ல முடிவு செய்தேன். சம்பவத்தன்று இரவு என் மனைவி பவித்ரா தூங்கி கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு தெரியாமல் குழந்தையை எடுத்து தலையில் அடித்தேன். பின்னர் அருகில் உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரில் குழந்தையை அமுக்கி கொன்றேன். இதுகுறித்து என் தம்பி ரஞ்சித்திடம் கூறினேன்.
இதையடுத்து நாங்கள் 2 பேரும் சேர்ந்து குழந்தையை வீட்டின் அருகே புதைத்து விட்டோம். இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து மணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக மணியின் தம்பி ரஞ்சித்தையும் கைது செய்தனர்.
பிறந்த 19-வது நாளில் ஆண் குழந்தையை தந்தையே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story