காங்கிரசில் இருந்த கும்பலால் சரத்பவார் பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு 2 முறை பறிபோனது; பிரபுல் பட்டேல் சாடல்


பிரபுல் பட்டேல்
x
பிரபுல் பட்டேல்
தினத்தந்தி 13 Dec 2020 1:16 AM IST (Updated: 13 Dec 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் இருந்த கும்பலால் சரத்பவார் 2 முறை பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு பறிபோனது என பிரபுல் பட்டேல் கூறினார்.

பிரதமராக தடை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக சரத்பவார் குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரபுல் பட்டேல் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் அவர் காங்கிரசில் இருந்த ஒரு கும்பலால் 1990-களில் சரத்பவார் 2 முறை பிரதமர் ஆக வாய்ப்பு பறிபோனது என கூறியிருந்தார்.

இதுகுறித்து மேலும் அவர், “ சரத்பவார் குறுகிய காலத்தில் காங்கிரசில் முக்கிய தலைவராக தனது இடத்தை வலுப்படுத்தினார். 1991 மற்றும் 1996-ல் அவர் பிரதமராக தேர்வாக இருந்தார். ஆனால் டெல்லி தா்பார் (வாரிசு) அரசியல் அதற்கு தடையை போட்டது. நிச்சயமாக அது சரத்பவாருக்கு தனிப்பட்ட இழப்பு தான். ஆனால் அதைவிட கட்சிக்கும், நாட்டுக்கும் தான் பெரிய இழப்பு “ என 
கூறியிருந்தார்.

கனவு நிறைவேறும்
இதுபற்றி நேற்று பிறந்தநாள் விழாவில் பிரபுல் பட்டேலிடம் கேட்டபோது அவர், “ 2 முறை பிரதமர் ஆகும் வாய்ப்பை சரத்பவார் இழந்தார். ஆனால் தற்போது ஒட்டுமொத்த மராட்டியமும் அவருக்கு ஆதரவாக நின்றால், நமது நிறைவேறாத கனவு நிறைவேறும்“ என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “ 1986-ல் சரத்பவார் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். அவர் காங்கிரஸ் விசுவாசி இல்லை என்ற பிம்பமே டெல்லியில் இருந்தது. 1978-ல் அவா் கட்சிக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டு இருந்தார் “ என்றார். எனினும் அவர் பிரபுல் பட்டேலின் கட்டுரை குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

Next Story