பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை - கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல், முறையாக மூடிவைக்காமல் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணறு மூலம் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கணக்கெடுக்கவும், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர்களும், நகராட்சி பகுதியில் ஆணையாளர்களும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆழ்துளை கிணறுகளை சுற்றி சிறிய மேடை அமைத்து, அதன் மீது சிலாப் வைத்து மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மூடி வைக்காத விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், 94864 54741 என்ற செல்போன் எண்ணில் ‘வாட்ஸ்-அப்‘ மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story