பா.ஜ.க. மேலிட பார்வையாளரை சந்தித்த காங்கிரஸ் ஜான்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கட்சி பதவி மறுப்பு
பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பார்வையாளரை சந்தித்த ஜான்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கட்சி பதவி மறுக்கப்பட்டுள்ளது.
ஜான்குமார் எம்.எல்.ஏ.
காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் ஜான்குமார். இவர் தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பினை முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக விட்டுக்கொடுத்தார். அதற்காகவே அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த தொகுதியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக (பொதுக்குழு) உள்ளார். எனவே ஜான்குமார் எம்.எல்.ஏ.வுக்கு முதலியார்பேட்டை தொகுதியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டிருந்தது.
கட்சி பதவி
இத்தகைய சூழ்நிலையில் தற்போது தொகுதிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதலியார்பேட்டை தொகுதியும் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால்
ஏற்கனவே அங்கு பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த ஜான்குமார் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் அந்த கட்சி பதவி வழங்கப்படவில்லை.
அவருக்கு மட்டுமின்றி அந்த தொகுதியில் வேறு யாரும் அந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை. ஜான்குமார் எம்.எல்.ஏ. விரைவில் கட்சி மாறுவார் என்ற பேச்சு சமீபகாலமாக இருந்து வந்தது. அதை நிரூபிக்கும் விதமாக கடந்த 7-ந்தேதி பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானாவை அவர் சந்தித்து பேசினார்.
விலக தயங்க மாட்டேன்
மேலும் தனக்கு தேர்தல் காலத்தில் உரிய மரியாதை வழங்கப்படாவிட்டால் கட்சியை விட்டு விலகவும் தயங்கமாட்டேன் என்று கட்சி மேலிடத்தை ஜான்குமார் எம்.எல்.ஏ. எச்சரித்திருந்தார். அவரது நடவடிக்கை குறித்து கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கூறினார்.
இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story