மத்திய அரசின் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை; பிரதமர் மோடியின் சகோதரர் மதுரையில் பேட்டி


பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி
x
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி
தினத்தந்தி 13 Dec 2020 3:30 AM IST (Updated: 13 Dec 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என்று பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் கூறினார்.

கனவுகள்
பிரதம மந்திரி மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பை, பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி நடத்தி வருகிறார். இவர் இந்த அமைப்பின் அகில இந்திய தலைவராக உள்ளார். இந்த அமைப்பின் கூட்டம், மதுரை மடீட்சியாவில் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து பிரதமராகி உள்ளார் மோடி. அதனால் தான் ஏழ்மையான மக்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை, கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். அதற்காக அல்லும், பகலும் உழைத்து வருகிறார்.

காங்கிரஸ் தடுக்கிறது
பிரதமரின் திட்டங்கள் குறித்து ஏழை மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை. பிரதமரின் திட்டங்களை மக்களிடம் இருந்து தூரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. பிரதமர் திட்டங்களிலிருந்து மக்களை விலக்கி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. பிரதமரின் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 22 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்களை மேலும் அதிகப்படுத்த உள்ளோம். தமிழக மக்கள் பாசமானவர்கள். குறிப்பாக மதுரைக்காரர்கள் மிகவும் பாசமானவர்கள். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி.

விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அது அடித்தட்டு மக்கள் வரை செல்வதில்லை. விவசாயிகளின் தோள்பட்டை சுமையை குறைக்கவே மோடி பாடுபட்டு வருகிறார். விவசாயிகளின் சிரமத்தை குறைக்கவே மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story