சோழவரத்தில், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கொலை - வழிப்பறி கும்பலை சேர்ந்த 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


சோழவரத்தில், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கொலை - வழிப்பறி கும்பலை சேர்ந்த 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Dec 2020 3:30 AM IST (Updated: 13 Dec 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

சோழவரத்தில் என்ஜினீயர் கல்லூரி மாணவரை அடித்துக்கொன்று ஏரியில் உடலை வீசிச்சென்ற வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சுனில். இவருடைய மகன் அகிலேஷ்(வயது 20). இவர், சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் சோழவரம் ஏரியில் குளிக்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

ஏரியில் குளித்துவிட்டு நண்பர்கள் அனைவரும் நள்ளிரவு வரை மது அருந்தினர். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.12 ஆயிரம், 6 விலை உயர்ந்த செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களை பறித்தனர்.

அந்த மர்ம கும்பலோடு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், மாணவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் அகிலேஷின் நண்பர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அகிலேஷ் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி சோழவரம் ஏரியில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அகிலேஷ் உடல் சோழவரம் ஏரியில் மிதந்து கொண்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story