இன்றைக்கு தமிழகத்தில் சிலர் ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்த நினைக்கிறார்கள்; ராமநாதபுரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தமிழகத்தில் சிலர் ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்த நினைக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
ராமநாதபுரத்தில் தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை காணொலி வாயிலாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-
வெற்றி நமக்கு தான்
ராமநாதபுரம் மண்ணுக்கே உரிய மகத்துவத்துடன் தி.மு.க.வை வளர்த்து வருகிறீர்கள். இது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக முக்கியமான காலக்கட்டம் என்பதை நான் உங்களுக்கு உணர்த்த தேவையில்லை. ஒரே இலக்குதான்; தி.மு.க.வின் வெற்றி! உதயசூரியன் வெற்றி! தமிழ்நாட்டில் திறக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்குப்பெட்டியிலும் உதயசூரியன் மட்டும் தான் உதிக்கவேண்டும். இது ஒன்று தான் இலக்கு. யார் வேட்பாளர்? உதயசூரியன் தான் வேட்பாளர், யார் வேட்பாளர்? தலைவர் கருணாநிதி தான் வேட்பாளர் இந்த ஒற்றை சிந்தனையுடன் தி.மு.க. தொண்டன் களம் கண்டால் எதிரில் எவர் வந்தாலும் வெற்றி நமக்குத்தான்!
கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து, அதனை மக்களுக்கு விதைத்து கோட்டையை பிடித்துவிடலாம் என்று எடப்பாடி கும்பல் பேராசையோடு காத்திருக்கிறது. அவர்களது அந்த ஆசை நிறைவேறாமல் தடுக்க வேண்டியது ஒன்றே தி.மு.க. தொண்டனின் பணி என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள்.
ஆன்மிகத்தை காரணம் காட்டி...
உலகம் முழுவதும் சுவாமி விவேகானந்தரின் புகழ் பரவ காரணம், ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னர் தான். இன்றைக்கு சிலர் ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் மகத்தான ஆன்மிகம் என்று சுவாமி விவேகானந்தர், இதே ராமேசுவரம் கோவிலில் 1897-ம் ஆண்டு பேசும்போது சொன்னார். மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகள், பலவீனமானவர்கள், நோயுற்றவர்களை காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்று சொன்னார் அவர்.
எளிமையான கதை ஒன்றை அவர் அப்போது சொல்லி இருக்கிறார். ஒரு எஜமானுக்கு ஒரு தோட்டம் இருந்ததாம். அதற்கு இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்களாம். ஒரு தோட்டக்காரன், அந்த எஜமானனை புகழ்வதிலும் அவர் முன்னால் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுபவராக இருக்கிறான். இன்னொரு தோட்டக்காரன், அந்த தோட்டத்தை கவனிப்பதில் ஆர்வம் செலுத்தினான். பழங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்தான். அந்த எஜமான் உயர்வுக்காக நாளும் உழைத்தான்.
நடிக்கிறார்கள்
எஜமானுக்கு யாரைப் பிடிக்கும்? தன் முன்னால் நடிப்பவரையா? தனக்கு உணவு பொருள்களை உற்பத்தி செய்து தருபவரையா?. இந்த கதையைச் சொல்லிவிட்டு, “ஆண்டவன் தான் எஜமான், அவனது தோட்டம் தான் இந்த உலகம். எந்த தோட்டக்காரனை ஆண்டவனுக்கு பிடிக்கும்?” என்று கேட்டார் விவேகானந்தர்.
இங்கே சிலர் வெறுமனே நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் தான் மக்களுக்கு நன்மைகள் செய்து கொண்டு இருக்கிறோம். இதை தான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா! ஏழைகள் சிரிக்க உருவாக்கப்பட்ட கட்சி தான் தி.மு.க.
தேனீக்கள் போல...
அ.தி.மு.க. ஆட்சியை கோட்டையை விட்டு துரத்துவதற்கு தமிழக மக்கள் சபதம் எடுத்துவிட்டார்கள். அதனுடைய அடையாளம் தான் தி.மு.க. முன்னணி தளகர்த்தர்கள் அனைவரும் தேர்தல் பரப்புரை செய்ய செல்லும் இடமெல்லாம் மக்கள் தேனீக்களை போல கூடுகிறார்கள். இதை பார்த்து பயத்தில் நடுங்கி கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுக்கு குத்தகைக்கு விட்ட பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும், ஜெயலலிதா நினைவிடத்துக்கும் போய் உங்களால் எப்படி மலர் வளையம் வைக்க முடிகிறது?. அண்ணா சொன்னது அவர் காலத்தோடு முடிந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்த பிறகும் உங்கள் கட்சிக்கு எதற்கு அண்ணா பெயர்?. எதற்காக கொடியில் அண்ணா படம்?.
உணர வேண்டும்
ஒரு கொள்ளை கும்பல், அ.தி.மு.க.வை வளைத்துக்கொண்டு விட்டது. தங்களது தலையை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டது என்பதை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்ந்தாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story