பெங்களூருவில், 3 மாதத்தில் மெட்ரோ ரெயிலில் பாஸ் பெற்று ஒரு லட்சம் பேர் பயணம்


பெங்களூருவில், 3 மாதத்தில் மெட்ரோ ரெயிலில் பாஸ் பெற்று ஒரு லட்சம் பேர் பயணம்
x
தினத்தந்தி 13 Dec 2020 3:00 AM IST (Updated: 13 Dec 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், கடந்த 3 மாதத்தில் பாஸ் பெற்று மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

பெங்களூரு,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மெட்ரோ ரெயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. 7 மாதங்களுக்கு பின் செப்டம்பர் 7-ந் தேதி முதல் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. ஆரம்பத்தில் பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் 3,770 பேர் மட்டுமே பயணம் செய்து வந்தனர். அதைதொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ந் தேதியில் இருந்து பசுமை மார்க்கத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. 3-ம் கட்டமாக செப்டம்பர் 11-ந் தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது முதல் மெட்ரோ ரெயிலில் பாஸ் வைத்துக்கொண்டு பயணம் செய்வோரின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரித்தது. நாளடைவில், பாஸ் பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் அதாவது டிசம்பர் 7-ந் தேதி வரை பாஸ் வைத்துக்கொண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

தற்போது பெங்களூருவில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 7-ந் தேதி வரை பாஸ் வைத்துக்கொண்டு 80 ஆயிரம் பேர் ரெயிலில் பயணித்தனர். தற்போது இதன் எண்ணிக்கை ஒரு லட்சமாக எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு காலத்திற்கு பின் பயணம் செய்ய டோக்கன் வினியோகிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 3 மாதத்தில் மெட்ரோ ரெயிலில் பாஸ் பெற்று பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் மெட்ரோ ரெயில்வே நிர்வாகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story