திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏதுமில்லை கலெக்டர் பேட்டி
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏதும் இல்லை என கலெக்டர் சிவராசு கூறினார்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,119 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் மொத்தமுள்ள 2,531 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சஜன்சிங் ஆர்.சவான் தலைமையில், மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலையில், திருச்சி என்.எம்.கே. காலனியில் உள்ள வெஸ்ட்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் மன்னார்புரம் செங்குளம்காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கலெக்டர் எஸ்.சிவராசு கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில்திருத்தம்
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்ப நாளாகக் கொண்டு சுருக்கமுறை திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் திருத்தம் தொடர்பாக கடந்த 10-ந் தேதி வரை மொத்தம் 65 ஆயிரத்து 452 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
2020-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வாக்காளர் பட்டியலில் 72 சதவீதம் வாக்காளர்கள் இருக்க வேண்டும். 72 சதவீதம் வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தால் வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் நம்பகத்தன்மையுள்ளதாக அமையும். ஆனால் திருச்சி மாவட்டத்தில் 74 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.
குளறுபடி இல்லை
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடிகள் ஏதும் இல்லை. வயது வாரியாக ஒப்பீடு செய்ததில் 18-19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் விகிதம் மக்கள் தொகையோடு ஒப்பீடு செய்யும் போது, 1.12 சதவீதம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 18-19 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் சுமார் 85 ஆயிரம் வாக்காளர்கள் இருக்க வேண்டும்.
தற்போது 48 ஆயிரத்து 374 புதிய வாக்காளர்கள் உள்ளனர். நடைபெற்று வரும் சுருக்கமுறை திருத்தங்களின் போது, இதுவரை பெறப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர் சேர்த்தல் மனுக்களில் 18-19 வயது பூர்த்தி அடைந்த 23 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை
தற்போது நடைபெறும் இரண்டாம் கட்ட முகாமில் சுமார் 15 ஆயிரம் 18-19 வயதுள்ள இளம் வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்க்க படிவம்-6 வருமென எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வந்தால் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையும், வாக்காளர்களின் எண்ணிக்கையும் சரியான விகிதத்தில் இடம்பெறும்.
சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளின் போது, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய களப்பணி செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் தேசிய வாக்காளர் தினமான வரும் ஜனவரி 25-ந் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story