வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தபால் அலுவலகத்தை காவிரி உரிமை மீட்பு குழுவினர் முற்றுகையிட்டனர்


வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தபால் அலுவலகத்தை காவிரி உரிமை மீட்பு குழுவினர் முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 13 Dec 2020 6:48 AM IST (Updated: 13 Dec 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மன்னார்குடி தபால் நிலையத்தை காவிரி உரிமை மீட்பு குழுவினர் முற்றுகையிட்டனர்.

மன்னார்குடி, 

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்பு குழு ஆலோசகர் டாக்டர் பாரதிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் திருவாரூர் கலைச்செல்வம், கோட்டூர் பூபாலன், கோவலன், நீடாமங்கலம் சதீஸ், மன்னார்குடி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

திரும்ப பெற வேண்டும்

பின்னர் காவிரி உரிமை மீட்பு குழுவின் ஆலோசகர் டாக்டர் பாரதிசெல்வன் கூறுகையில்,

இந்தியாவில் உழவர்கள் உயிர் வாழவும், சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கவும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது போல் தமிழக விவசாயிகள் சென்னையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

Next Story