வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2020 7:52 AM IST (Updated: 13 Dec 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 1,151 மையங்களில் உள்ள 2,791 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, 18 வயது நிரம்பியவர்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்ய படிவம்-8, முகவரி மாற்றம் செய்ய படிவம்-8(ஏ)-யை பெற்று அவற்றை பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடிகளில் வழங்கலாம். நாளையும்(அதாவது இன்று) சிறப்பு முகாம் நடைபெறுவதால் மக்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா? தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா? என உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

வகுப்பறைகள்

பின்னர் அவர், முகாமிற்கு புதிதாக பெயர் சேர்க்க வந்த மாணவர்கள் மற்றும் பெயர் திருத்தம் செய்ய வந்திருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர், அரசர் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் பள்ளி கட்டிடத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அரண்மனை வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் அலுவலகம், மேற்கு போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் காமராஜ் மார்க்கெட் வளாக கட்டிட பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது சத்திரம் தாசில்தார் பழனியப்பன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story