ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானத்தை வழங்கினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள ராகவேந்திரர் கோவில் ஆகிய கோவில்களில், ரஜினி நீடூழி வாழ அவரது பெயரில் மாவட்ட செயலாளர் ஆர்.எத்திராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் உள்ள அண்ணாமலை ஓட்டலில் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தினமும் 3 வேளையும் பாதி விலையில் உணவு வழங்குவதற்கான அடையாள அட்டையும், ஒரத்தூரில் உள்ள வேலா காது கேளாதோர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அன்னதானமும், குண்டலப்புலியூரில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள சிறுவர்கள், முதியோர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
அதனை தொடர்ந்து வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை அருகில் நடந்த விழாவில் ஏழை, எளிய மக்கள் 200 பேருக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், அன்னதானத்தையும், விக்கிரவாண்டியில் 300 பேருக்கு வேட்டி- சேலையும், அன்னதானமும், வல்லத்தில் நரிக்குறவர்கள் 200 பேருக்கும், செஞ்சி கூட்டுசாலையில் 200 பேருக்கும் நலத்திட்ட உதவிகள், அன்னதானத்தை மாவட்ட செயலாளர் எத்திராஜ் வழங்கினார். பின்னர் மாலை 6 மணிக்கு விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவிலில் மகளிர் அணி சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் வாஞ்சிநாதன், விழுப்புரம் நகர செயலாளர் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்குமார், மகளிர் அணி செயலாளர் யமுனாராணி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரேம்குமார், விவசாய அணி செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சீத்தாராமன், பிரபு, சக்திவேல், தனசேகர், பேரூர் கழக செயலாளர் சந்தோஷ், நகர நிர்வாகிகள் சுகுமார், வெங்கட், வெற்றி, மதன், ராஜி, ராமு, சீனு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story