விழுப்புரம் மாவட்டத்தில் 1,957 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு


விழுப்புரம் மாவட்டத்தில் 1,957 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2020 10:26 AM IST (Updated: 13 Dec 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 1,957 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2021 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி கடந்த 16-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நாளை மறுநாள் (15-ந் தேதி) வரை நடைபெறுகிறது. இப்பணிக்காக வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கும், பெயர் நீக்கம், திருத்தம் மேற்கொள்தல் உள்ளிட்டவைகளுக்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,957 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் மேற்கொள்தல் உள்ளிட்டவை தொடர்பாக உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்குச்சாவடி அமைவிட நியமன அலுவலரிடம் கொடுத்தனர். இம்முகாமில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் பலர் தங்களுடைய பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்தனர்.

விழிப்புணர்வு வாகனங்கள்

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிக்கான முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை தொடங்கி வைத்து அரசு பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் அண்ணாதுரை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்ததை பார்வையிட்ட அவர், அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

மேலும் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்தந்த பகுதிகளில் வசிக்கும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை கண்டறிந்து உடனடியாக வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும் எனவும், வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருமுறை இருந்தால் உடனே நீக்கம் செய்ய வேண்டும், அதுபோல் சமீபத்தில் இறந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் இருக்குமாயின் அவர்களுடைய பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும், அவ்வாறு இறப்பு சான்றிதழ் இல்லையெனில் படிவம் 7-ஐ பூர்த்தி செய்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், துணை தாசில்தார் வெங்கட்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story