மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்


மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 13 Dec 2020 6:16 AM GMT (Updated: 13 Dec 2020 6:16 AM GMT)

10 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுக்தா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியில் 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையில் கடந்த 1-ந்தேதி வரை நீர்மட்டம் 26 அடியாக இருந்தது. அதன்பிறகு அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் பெய்த தொடர் மழை காரணமாக மணி ஆறு மற்றும் முக்தா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் காரணமாக மணிமுக்தா அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது முழு கொள்ளளவான 36 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் மணிமுக்தாற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் ஆற்றின் இருகரையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. தண்ணீர் திறப்பால் சூளாங்குறிச்சி, அகரக்கோட்டாலம், அணைக் கரை கோட்டாலம், வாணியந்தல், தண்டலை, மாடூர், பெருவங்கூர், வீ.பாளையம், வீரசோழபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி பகுதியில் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டும் அதிகபட்சமாக 33 அடி வரை மட்டுமே வந்துள்ளது. ஆனால் இந்த முறை பருவமழை சரியாக பெய்ததால் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.


Next Story