அணைக்கட்டு அருகே கல்தூண்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலி
அணைக்கட்டு அருகே கல்தூண்கள் ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் மீது அமர்ந்து வந்த 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அவரது நிலத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட கல் தூண்களை வாங்குவதற்கு ஆந்திர மாநிலம் வீ.கோட்டா பகுதியை சேர்ந்த ஏஜெண்டு அஜய் என்பவர் மூலம் ஆர்டர் கொடுத்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 60 கல்தூண்களை ஏற்றிக்கொண்டு கீழ்கொத்தூருக்கு லாரி புறப்பட்டு வந்தது. லாரியை வீ.கோட்டா பகுதியைச் சேர்ந்த டிரைவர் குப்புசாமி ஓட்டி வந்தார். கல்தூண்களை இறக்குவதற்காக தொழிலாளர்கள் மற்றும் ஏஜெண்டு அஜய் உள்பட 6 பேர் அந்த லாரியில் பயணம் செய்தனர்.அவர்களில் 3 தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிய கல்தூண்கள் மீது படுத்து தூங்கிக் கொண்டு வந்தனர். டிரைவர் அருகில் ஏஜெண்டு அஜய் உள்பட மற்ற 3 பேர் முன் சீட்டில் அமர்ந்து வந்தனர்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் அணைக்கட்டிலிருந்து அப்புகல் சாலை வழியாக கீழ்கொத்தூருக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கொல்லை பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென மரத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கல்தூண்களின் பாரம் தாங்காமல் அதன் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்த 3 பேரும் சரிந்த தூண்களுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடந்த சத்தத்தைக் கேட்டு அப்பகுதி கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து பார்த்து அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இறந்த தொழிலாளர்கள் வீ.கோட்டாவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 45), ராமன் (40), வரதப்பன் (40) என்பது தெரியவந்தது. இதனிடையே விபத்து நடந்ததும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் குப்புசாமி மற்றும் அவருடன் அமர்ந்திருந்த ஏஜெண்ட் அஜய் உள்பட 4 பேர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தகவல் கொடுத்தனர். விபத்தில் பலியானவர்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அனைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story