பேளுக்குறிச்சி அருகே, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக்கோரி தண்டோரா போடும் தலைமை ஆசிரியர்


பேளுக்குறிச்சி அருகே, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக்கோரி தண்டோரா போடும் தலைமை ஆசிரியர்
x
தினத்தந்தி 13 Dec 2020 9:55 PM IST (Updated: 13 Dec 2020 9:55 PM IST)
t-max-icont-min-icon

பேளுக்குறிச்சி அருகே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக்கோரி தலைமை ஆசிரியர் தண்டோரா போட்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே ஈச்சம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக ராஜேந்திரனும், துணை ஆசிரியராக ரவியும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் சுமார் 70 பேர் வரை படித்தனர். தற்போது 20 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈச்சம்பட்டியில் உள்ள பொதுமக்கள் வரும் கல்வி ஆண்டிலாவது தனியார் பள்ளிகளை நாடாமல் தங்களது குழந்தைகளை அரசு தொடக்க பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தினந்தோறும் காலை வேளையில் ஈச்சம்பட்டியில் ஒவ்வொரு வீதியாக சென்று தண்டோரா போட்டு வித்தியாசமான முறையில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பள்ளிக்கூடத்தை மாணவ, மாணவிகள் மறந்துவிட கூடாது என்பதற்காக தண்டோரா அடித்து அங்குள்ள சிறுவர், சிறுமிகளை பள்ளி வளாகத்திற்கு அழைத்து வந்து, நோய் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் ஒன்று கூடி விளையாடுவதை தவிர்க்க வேண்டும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் அறிவுறுத்தி வருகிறார். ராஜேந்திரனின் இந்த செயலை ஊர்பொதுமக்கள் வியப்புடனும், ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாவது:-

தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியில் அனைத்து விதமான சலுகைகளையும் அரசு அளித்து வருகிறது. புத்தகம், உணவு என அனைத்துமே இலவசமாக மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும்போது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அது மட்டுமல்லாமல் அரசின் கற்போம், எழுதுவோம் திட்டத்தின் அடிப்படையில் 15 வயதுக்கு மேல் கல்வி கற்காமல் இருப்பவர்களுக்கும், கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தினந்தோறும் ஊருக்குள் சென்று தண்டோரா அடித்து விழிப்புணர்வு செய்து வருகிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் நான் துணை ஆசிரியராக பணிபுரிந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story