பா.ஜ.க.வின் அங்கமாகவே ரஜினி கட்சி இருக்கும் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
பா.ஜ.க.வின் அங்கமாகவே ரஜினி கட்சி இருக்கும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறி உள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கோபியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது தற்போது வரை நடக்கவில்லை. கோபி தொகுதியில் தேவையாக உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் குளிர்பதன கிடங்கு அரசு சார்பாக ஏற்படுத்தி, அதற்கு இலவசமாக மின்சாரம் கொடுக்க கூடிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். மேலும், உழவர் சந்தையை அதிக அளவில் திறக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ.க.வின் அங்கமாகவே...நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஆன்மீக அரசியல் என்று கூறியுள்ளார். பா.ஜ.க வின் ஒரு அங்கமாக ரஜினி ஆரம்பிக்கும் கட்சி இருக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, முதல்–அமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க.வில் உள்ளவர்கள் யாரும் கூறவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி நேர்மையாக நடக்காது என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கொ.ம.தே.க. தனது தேர்தல் அறிக்கையாக தி.மு.க.விடம் கொடுத்துள்ளது. தஞ்சை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கான செயல்பாடுகள் இல்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பும், அந்த துறையின் அறிவிப்புகளும் வெவ்வேறாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. அவினாசி– அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சிவராஜ், மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.