விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு விழா; கட்டுப்பாடுகளை மீறி பக்தர்கள் தரிசனம்
விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் நேற்று கடைஞாயிறு விழா நடந்தது. கட்டுப்பாடுகளை மீறி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடைஞாயிறு விழா
விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழாவின்போது கோவிலில் உள்ள சிம்மகுளத்தில் மூழ்கி எழுந்து, கோவிலில் படுத்து உறங்கினால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டு கார்த்திகை கடை ஞாயிறு விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு சிம்ம குளம் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிம்மகுளத்தில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிம்ம குளத்தில் இருந்து புனித நீர் எடுத்து வந்து பெண்கள் மீது தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 6 மணியிலிருந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
கட்டுப்பாடுகளை மீறி...
ஆனால் அதை பொருட்படுத்தாமல் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கட்டுப்பாடுகளை மீறி, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகளை உடைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு 180 பக்தர்கள் மட்டுமே தரிசிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மீறி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கோவில் ஊழியர்களால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல், தரிசனத்துக்கு அனுமதித்தனர்.
சிம்ம குளத்திலிருந்து நீரை எடுத்துவந்து கொப்பரையில் வைத்துக்கொண்டு பக்தர்கள் மீது தெளித்து அனுப்பினர். இதனால் காலை 6½ மணி முதல் இரவு 8 மணி வரை 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடியதாக இருந்த நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு மேல் தரிசனம் செய்திருப்பார்கள் என்று பக்தர் ஒருவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து அறநிலை துறை இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஆய்வாளர் ரவிக்குமார், கோவில் செயல் அலுவலர் சசிகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story