போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கர்நாடகத்தில் 3-வது நாளாக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி


பெங்களூருவில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்த பயணிகளை படத்தில் காணலாம்.
x
பெங்களூருவில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்த பயணிகளை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 14 Dec 2020 3:28 AM IST (Updated: 14 Dec 2020 3:28 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் 3-வது நாளாக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பஸ்கள் இயக்கப்படவில்லை
அரசு போக்குவரத்து ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 11-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் சுமார் 25 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பஸ்கள் அடங்கும். நேற்று முன்தினமும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று 3-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்கள் மட்டுமே ஓடின. பஸ்களை இயக்கினால் கல்வீசி தாக்குவோம் என்று போராட்டம் நடத்தும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து குறைந்த அளவில் ஓடிய பஸ்களும் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து ஊழியர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். பனசங்கரி பஸ் நிலையம் அருகேயும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுதந்திர பூங்காவில் ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுழற்சி அடிப்படையில் ஊழியர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் போக்குவரத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

மக்களின் நடமாட்டம்
பஸ்கள் ஓடாததால் நகரின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையங்களில் ஒருவர் கூட நடமாடவில்லை. பஸ்கள் இயக்கப்படாததால் மெஜஸ்டிக் பகுதியில் மக்களின் நடமாட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் மெஜஸ்டிக்கை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

மங்களூருவில் முன்பதிவு செய்துவிட்டு பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள், பஸ்களை இயக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். பஸ் இயக்காததால் தாங்கள் செலுத்திய கட்டண தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பஸ்களின் போக்குவரத்து முடங்கியுள்ளதால், கோவில் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

ரூ.30 கோடி இழப்பு
அதாவது தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில், மலை மாதேஸ்வரன் கோவில், குக்கே சுப்பிரமணியா ஆகிய கோவில்களில் லட்சார்ச்சனை தீப நிகழ்வு நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து கலந்து கொள்வது வழக்கம். பஸ்கள் ஓடாததால், பக்தர்கள் அந்த கோவில்களுக்கு வருகை தருவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த கோவில் நிர்வாகங்கள் சற்று கவலை அடைந்துள்ளன. கடந்த 3 நாட்களில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.30 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மண்டியா, மைசூரு, குடகு, தட்சிணகன்னடா, தார்வார்-உப்பள்ளி, பெலகாவி, ஹாவேரி உள்பட மாநிலம் முழுவதும் 3-வது நாளாக அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைக்காக அரசு பஸ்களை நம்பியுள்ள கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதுபோல் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் திரும்ப முடியாமலும் பெங்களூரு, தட்சிணகன்னடா, மைசூரு, தார்வார் மாவட்டங்களில் வேலை பார்த்து வரும் பிற மாவட்ட தொழிலாளர்கள் சிரமப்பட்டனர்.

பல மடங்கு கட்டணம்
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து கழகங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓடுகின்றன. அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். அந்த தனியார் பஸ்களின் நடத்துனர்கள், இவ்வளவு தான் கட்டணம், விரும்பினால் வரலாம் இல்லாவிட்டால் போங்கள் என்று கூறுகிறார்கள். வேறு வழி இல்லாமல் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கோடிஹள்ளி சந்திரசேகரை பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தாவணகெரேயில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், கோடிஹள்ளி சந்திரசேகருக்கும் என்ன தொடர்பு உள்ளது. அவர் விவசாய சங்க தலைவர். விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக போராடட்டும். ஆனால் அவர் பச்சை துண்டை தோளில் போட்டுக் கொண்டு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்துவது சரியல்ல. அவர் இடைத்தரகர்களின் தலைவர்“ என்றார்.

Next Story