திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றிய மர்ம நபர்கள்; கோவில் நிர்வாகம் போலீசில் புகார்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அனுமதியின்றி மர்ம நபர்கள் தீபம் ஏற்றி உள்ளனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் போலீசில் புகார் செய்துள்ளது.
கார்த்திகை திருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீப திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் கார்த்திகை மகா தீபம் ஏற்றி வருகிறது.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை மகாதீபம் வழக்கம் போல உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி அன்று கோவில் நிர்வாகம் ஏற்றியது. அதே சமயம் மலை உச்சியில் உள்ள தூணில்தான் கார்த்திகை மகாதீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தது. மேலும் கார்த்திகை தீப திருநாளில் போராட்டமும் நடத்தின.
மலையில் திடீர் தீபம்
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மலை உச்சியில் உள்ள தூணில் எண்ணெய் துணியை வைத்து மர்ம நபர்கள் திடீரென்று தீபம் ஏற்றி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசில், கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி புகார் செய்துள்ளார். அனுமதியின்றி தூணில் தீபம் ஏற்றிய மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பழனி ஆண்டவர் கோவில் பகுதி மற்றும் புதிய படிக்கட்டுப்பாதை ஆகிய 2 பாதையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மலை உச்சியில் உள்ள தூணுக்கு விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story