ராஜபாளையத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படுவார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ராஜபாளையத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற போலீசார் தகுதித்தேர்வு பாதுகாப்பிற்காக ராஜபாளையம் போலீசார் சென்று விட்டனர். ராஜபாளையம் நகர்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதனால் பஞ்சு மார்க்கெட், நேரு சிலை, பழைய பஸ்நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், மலையடிப்பட்டி ரெயில்வே கேட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வழிகாட்டுதல் இல்லாததால் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூடுதலாக நியமனம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ராஜபாளையம் நகர் பகுதியில் போதுமான போக்குவரத்து போலீசார் இல்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் தேர்வு பணிக்காக போக்குவரத்து போலீசார் சென்றதால் இன்னும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் நகர் பகுதிகளில் காணப்பட்டது.
ஆதலால் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் அல்லது தேர்வு பணியில் போலீசார் ஈடுபடும் காலங்களில் இந்த பகுதிகளில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.
நடவடிக்கை
ராஜபாளையம் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை சிரமம் கருதி நகர்பகுதியில் தேவையற்ற வாகனங்கள் நுழைய தடை விதித்து டி.பி.மில்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது.
சத்திரப்பட்டி மேம்பால பணிகள் முடிவடையாததால் அதிக உயரம் கொண்ட கனரக வாகனங்கள் நேர் வழியில் செல்ல அனுமதி உள்ளது. தற்போது போலீசார் இல்லாததால் இவர்கள் டி.பி. மில்ஸ் ரோட்டின் பாதி வழியில் சென்று வேறு வழியின்றி மலையடிப்பட்டி ரெயில்வே கேட் வழியாக திரும்ப வழியில்லாமல் திணறுகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story