பந்தலூர் அருகே, காட்டு யானை தாக்கி தி.மு.க. கவுன்சிலர்- மகன் பலி
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவருடைய மகன் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அதனருகில் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் அமைந்து இருக்கின்றன. இங்கு வனவிலங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சேரம்பாடி அருகே உள்ள அரசு தேயிலை தோட்ட (ரேஞ்ச்-1) பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 49). இவர் கூடலூர் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். இவருடைய மகன் பிரசாந்த் (21). இவர் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாந்த் வேலைக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து வந்தார். பத்து லைன்ஸ் பகுதி அருகே திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு காட்டு யானை வெளியே ஓடி வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பி ஓடினார்கள்.
அப்போது எதிர்பாராதவிதமாக பிரசாந்த் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து காட்டுயானை அவரை தாக்கியது. இதில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பிரசாந்தின் நண்பர்கள் அவரது தந்தையான ஆனந்தராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் தனது நண்பரான மருதை என்பவருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பத்து லைன்ஸ் பகுதிக்கு அருகே சென்றபோது, புதருக்குள் மறைந்து இருந்த காட்டு யானை திடீரென வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இருந்தபோதிலும் அந்த காட்டு யானை அவர்களை துரத்தி சென்றது. இதில் ஆனந்தராஜை காட்டுயானை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரக அதிகாரி சின்னதம்பி, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் மற்றும் சேரம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு காட்டு யானை முகாமிட்டு உள்ளதா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள்.
கடந்த 11-ந் தேதி சேரம்பாடி அருகே உள்ள கண்ணம்பள்ளியில் நாகமுத்து என்பவர் காட்டு யானை தாக்கியதில் பலியானார். தற்போது காட்டு யானை தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை மேலும் அதிகரித்து உள்ளது. அத்துடன் யானை-மனித மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story