வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பம் - கலெக்டர் தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2020 10:00 PM GMT (Updated: 14 Dec 2020 3:05 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகிறது. பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிடவும், திருத்தங்கள் இருந்தால் சரிசெய்துகொள்ளவும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிங்கர்போஸ்ட்டில் உள்ள தெரசா பள்ளி மற்றும் மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள ஜோசப் பி.எட். கல்லூரி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். கடந்த மாதம் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் பலர் தாமாக முன்வந்து படிவங்களை சமர்ப்பித்தனர்.

இதுவரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 396 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து உள்ளனர். ஏற்கனவே சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் முகவரி மாற்றம் மற்றும் இறந்துவிட்ட காரணத்தால் பல்வேறு வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

தற்போது பெயர் நீக்கம் செய்வதற்காக 1,068 பேர், முகவரி மாற்றம் 1,838 பேர் உள்பட இதுவரை 14 ஆயிரத்து 142 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் இன்னும் 2 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story