தஞ்சை மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வை 12,162 பேர் எழுதினர் 1,523 பேர் பங்கேற்கவில்லை
தஞ்சை மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வை 12,162 பேர் எழுதினர். இதில் 1,523 பேர் பங்கேற்கவில்லை.
தஞ்சாவூர்,
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
இதற்காக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வல்லம் பிரிஸ்ட் பல்கலைக்கழகம், விளார் பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி ஆகிய 5 இடங்களில் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 10 ஆயிரத்து 964 ஆண்கள், 2 ஆயிரத்து 721 பெண்கள் என 13 ஆயிரத்து 685 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
செல்போனுக்கு தடை
அவர்கள் அனைவருக்கும் ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களுக்கு நேற்றுகாலை 8 மணி முதலே தேர்வர்கள் வர தொடங்கினர். இவர்கள் செல்போன், கால்குலேட்டர், கைக்ெகடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் அறைக்கு வெளியே பொருட்களை வைத்துவிட்டு தேர்வு அறைக்கு சென்றனர்.
ஹால்டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை கொண்டு வராதவர்கள் தேர்வு அறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். முக கவசம் அணிந்து வராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
பரிசோதனை
மேலும் தேர்வர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுதிக்கப்பட்டனர். தேர்வர்களின் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. எழுத்துத்தேர்வு காலை 11 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை நடந்தது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தங்களது தேர்வு எண் எந்த அறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குழப்பம் இன்றி தேர்வர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தேர்வு மையங்களின் நுழைவு வாசலில் தெளிவான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத விண்ணப்பம் அளித்து இருந்தும் பல்வேறு காரணங்களால் 1,523 பேர் தேர்வு எழுத வரவில்லை. தஞ்சை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 162 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் தேர்வு மையங்களுக்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதையும் வீடியோவில் போலீசார் பதிவு செய்தனர். தேர்வு மையங்களில் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையங்களை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிநபர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு மையங்களில் 950 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story