மராட்டியத்தில் புதிதாக 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் புதிதாக 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2020 6:30 AM GMT (Updated: 14 Dec 2020 6:13 AM GMT)

மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 717 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 80 ஆயிரத்து 416 ஆக உயர்ந்து உள்ளது.

மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்த போதும், கடந்த 2 நாட்களாக குணமானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. நேற்று மாநிலத்தில் 3 ஆயிரத்து 83 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 5 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். அதாவது தொற்று பாதித்தவர்களில் 93.44 சதவீதம் பேர் குணமாகி இருக்கிறார்கள். மாநிலத்தில் தற்போது 74 ஆயிரத்து 104 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 ஆயிரத்து 403 பேர் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மாநிலத்தில் மேலும் 70 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 48 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று பாதித்தவர்களில் உயிரிழந்தவர்கள் சதவீதம் 2.56 ஆக உள்ளது.

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 606 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 629 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 162 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 12 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல நகரில் மேலும் 12 பேர் பலியானதால் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 981 ஆக அதிகரித்து உள்ளது.

தானேயை பொறுத்தவரை நகர் பகுதியில் 116 பேருக்கும், புறநகரில் 60 பேருக்கும், நவிமும்பையில் 96 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 110 பேருக்கும் புதிதாக வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல புனே நகரில் மேலும் 294 பேருக்கும், புறநகரில் 182 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Next Story