பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரக்கொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கொலை செய்யப்பட்ட சுடலைமணியின் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் பார்வையிட்டபோது எடுத்த படம்
x
கொலை செய்யப்பட்ட சுடலைமணியின் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் பார்வையிட்டபோது எடுத்த படம்
தினத்தந்தி 14 Dec 2020 7:45 PM GMT (Updated: 14 Dec 2020 5:37 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இறைச்சி கடை தொழிலாளி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரம் நல்வாழ்வு ஆசிரமம் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் சுடலைமணி (வயது 27). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

திருமணமான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சுடலைமணி, கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

தலையில் கல்லைப்போட்டு கொலை
நேற்று முன்தினம் காலையில் சுடலைமணி வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இரவில் வேலை முடிந்ததும் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அவர் வீட்டுக்கு செல்லவில்லை. எனவே, அவரை உறவினர்கள் தேடினர்.

இந்த நிலையில் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் மாடியனூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சுடலைமணி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைந்த நிலையில் இருந்தது. அவரது உடலின் அருகில் இருந்து சிறிது தூரத்தில் ரத்தம் தோய்ந்த பெரிய பாறாங்கல் கிடந்தது.

போலீசார் விசாரணை
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன், பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்துக்கு மோப்ப நாய் ‘ரிக்கி‘ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, தோட்டத்தில் சிறிது தூரம் ஓடியது. ஆனாலும், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இறந்த சுடலைமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?
இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் ஆவுடையானூர்-அரியப்பபுரம் ரோடு டாஸ்மாக் கடையின் முன்புள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுடலைமணியை மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும், அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் சிலர் சென்றதும் பதிவாகி இருந்தது.

எனவே, சுடலைமணியை நண்பர்கள் யாரேனும் தோட்டத்துக்கு அழைத்து சென்று தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story