குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்றுமுதல் அனுமதி; தென்காசி கலெக்டர் அறிவிப்பு


குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீர் விழுந்ததை படத்தில் காணலாம்.
x
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீர் விழுந்ததை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 15 Dec 2020 1:30 AM IST (Updated: 14 Dec 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்றுமுதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 9 மாதங்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று குறைந்ததும் தமிழக அரசால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், குற்றாலத்தில் மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. மேலும், அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

குளிக்க அனுமதி
இந்தநிலையில் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒருபகுதியாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் உத்தரவின்படி தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் குளிக்கலாம். அவ்வாறு அனுமதி அளிக்கப்படும்போது பொதுமக்களை ஒழுங்குபடுத்தி அருவிகளில் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்யப்பட்டு அந்த குழுவின் முடிவின்படி ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அதன் அடிப்படையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இயக்க நடைமுறைகள்
பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது தவறாமல் முக கவசம் பயன்படுத்த வேண்டும். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து அருவிகளுக்கு வருவதையும், அருவிகளில் இருந்து நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்தையும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும்.

கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவேண்டும். தனியார் விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகள் கதவுகளை அடைத்து வைத்து இருக்கவும், அருவிப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தவறாது கிருமிநாசினி பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அருவிகள் மற்றும் இதர சுற்றுலா இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story