டி.வி. நடிகை சித்ராவின் பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை


ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு டி.வி. நடிகை சித்ராவின் தாய், சகோதரி வந்தபோது எடுத்த படம்.
x
ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு டி.வி. நடிகை சித்ராவின் தாய், சகோதரி வந்தபோது எடுத்த படம்.
தினத்தந்தி 15 Dec 2020 1:45 AM IST (Updated: 14 Dec 2020 11:48 PM IST)
t-max-icont-min-icon

டி.வி. நடிகை சித்ராவின் பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.

தற்கொலை
பிரபல டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை
இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். 12 மணிக்கு விசாரணை தொடங்கி 3 மணி நேரம் நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியில் வந்த சித்ராவின் தாய் விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

விசாரணை முடிந்த பின்பு முழு தகவலை அளிக்கிறோம். எந்த ஒரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக மாட்டார். சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேம்நாத் தான் காரணம். அதற்கான விவரங்களை ஆர்.டி.ஓ. விசாரணையில் கூறியுள்ளோம். மீண்டும் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story