கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 15 Dec 2020 1:30 AM IST (Updated: 15 Dec 2020 12:21 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பத்திரப்பதிவு அலுவலகம்
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, கூடுவாஞ்சேரி, நந்திவரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொத்துகளை விற்கவும் வாங்கவும் கூடுவாஞ்சேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கிராமங்களில் உள்ள நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யும்போது லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சொத்துகளை பத்திரப்பதிவு செய்வதற்காக வந்ததால் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக பத்திரப்பதிவு அலுவலகத்தின் கதவுகளை மூடிய பின்னர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை செய்தனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடியும் போது எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story