திருவள்ளூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; மறியல்; 120 பேர் கைது


வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருவள்ளூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் மறியலில்ஈடுபட்டபோது
x
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருவள்ளூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் மறியலில்ஈடுபட்டபோது
தினத்தந்தி 15 Dec 2020 1:45 AM IST (Updated: 15 Dec 2020 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.

போராட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் செங்குட்டுவன், விவசாய சங்க மாநில நிர்வாகி துளசி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சம்பத், மாவட்ட துணை செயலாளர் சரவணன், மார்க்சிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சுந்தர்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜா, விவசாய தொழிலாளர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சகாயமேரி கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறியல்
இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்த போராட்டத்திற்கு அனுமதி கிடை யாது என கூறிய போலீசார் அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். அப்போது போலீசாருக்கும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து திடீரென சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 18 பெண்கள் உட்பட 120 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story