புழல் ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி


பலியான மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலிப்குமார்.
x
பலியான மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலிப்குமார்.
தினத்தந்தி 15 Dec 2020 1:30 AM IST (Updated: 15 Dec 2020 12:37 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

புழல் ஏரியில் குளித்தனர்
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், ராஜு, சைமன், தாமரை, அபின், மணிகண்டன், தமிழ்ச்செல்வன் மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த திலிப் குமார் ஆகிய 8 பேரும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று வந்தனர். இவர்கள் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

இவர்கள் 8 பேரும் நேற்று காலை அம்பத்தூரை அடுத்த புத்தகரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். மதியம் 12 மணியளவில் அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, மதுரா மேட்டூர் 5-வது தெரு பின்புறம் உள்ள புழல் ஏரியில் குளித்தனர். அதில் 5 பேர் ஏரிக்கரையோரம் குளித்தனர்.

3 பேர் நீரில் மூழ்கி பலி
ஆனால் மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலிப்குமார் ஆகிய 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் அம்பத்தூர், மாதவரம் பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

அரைமணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்
பலியானவர்களில் மணிகண்டன் (வயது 18) அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் சக்தி நகரைச் சேர்ந்தவர். இவர், முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். அம்பத்தூர் பாடசாலை தெருவைச் சேர்ந்தவரான தமிழ்ச்செல்வன் (17), சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.

மற்றொருவரான பிலிப் குமார் (19) வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர். இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story