மங்களூரு அருகே மகனை கொன்று தம்பதி தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
மங்களூரு அருகே கடன் தொல்லையால் மகனை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே முல்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அலயங்கடி கல்லப்பு ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது 40). இவரது மனைவி ரக்ஷனா(38). இந்த தம்பதியின் மகன் சாலியான்(8). மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஓட்டலில் வினோத் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு சொந்த ஊருக்கு வந்த வினோத், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் வினோத்துக்கு வருமானம் கிடைக்கவில்லை. மேலும் அவர் தொழிலுக்காக பலரிடம் இருந்து கடனும் வாங்கி இருந்தார். அந்த கடனையும் அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த வினோத் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது மனைவி ரக்ஷனாவிடம் தெரிவித்தார். அப்போது அவர் நானும் உங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் 2 பேரும் இறந்து விட்டால் மகன் சாலியான் அனாதையாகி விடுவான் என்று கருதிய வினோத்தும், ரக்ஷனாவும் சாலியானை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மாலை பாலில் விஷத்தை கலந்து சாலியானுக்கு வினோத்தும், ரக்ஷனாவும் கொடுத்தனர். அந்த பாலை குடித்த சிறிது நேரத்தில் சாலியான் பரிதாபமாக இறந்தான். பின்னர் வினோத்தும், ரக்ஷனாவும் மீதம் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் முல்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் மகனை கொன்று வினோத்தும், ரக்ஷனாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முல்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் மகனை கொன்று தம்பதி தற்கொலை செய்த சம்பவம் முல்கியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story