ராமநாதபுரத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம்; 55 விவசாயிகள் கைது; குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 55 விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் மசோதாக்களை திரும்ப பெற கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு மயில்வாகனன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முத்துராமு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கருணாநிதி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், ம.தி.மு.க. நிர்வாகி குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் அதனை மீறி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றதால் போலீசார் விவசாயிகளை கலைந்து போகும்படி கூறினர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்.
கைது
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மறுத்து தரையில் படுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 12 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story