நாமக்கல்லில் உள்ள மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.6½ லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
மதுரையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் சண்முக ஆனந்தின் நாமக்கல் வீட்டில் நடந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.6½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர்
மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முகஆனந்த். விருதுநகர் மாவட்டத்தில் இவரது காரில் இருந்து கடந்த 12-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள சண்முக ஆனந்த் தங்கி இருந்த வாடகை வீடு மற்றும் அவரது தாயார் வீட்டில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
ரூ.6.46 லட்சம் பறிமுதல்
நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் சண்முக ஆனந்த் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வீட்டில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்து 700 இருந்தது. இதை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதவிர அங்கு 30 பவுன் நகைகளும் இருந்தன. அவை எப்படி வாங்கப்பட்டது? என்பது குறித்து வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.
சண்முக ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியபோது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story