புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 5:54 AM IST (Updated: 15 Dec 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, 

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகம் முன்பு 3 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து போராட்டம் நடத்துவதற்காக விவசாயிகள் போராட்ட குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமையா தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர், அவர்களது குடும்பத்தினர் நேற்று காலை புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எல்.ஏ. ரவுண்டானா அருகே திரண்டனர். இந்த போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் கலெக்டர் அலுவலகம் முன்பும், பி.எல்.ஏ. ரவுண்டானா அருகேயும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

டி.ஐ.ஜி. ஆய்வு

கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது. 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் எங்கு திரும்பினாலும் போலீஸ் தலையாக தென்பட்டது.

மேலும் தடுப்புகள் அருகே பாதுகாப்பு கவச உடை, கையில் லத்தியுடன் போலீசார் நின்றதால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையில் பாதுகாப்பு பணிகளை திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உடன் இருந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பி.எல்.ஏ. ரவுண்டானா அருகே உள்ள பஸ் நிறுத்தத்தின் பக்கம் மரத்தடியில் காத்திருப்பு போராட்டம் நடத்த கேட்டுக்கொண்டனர்.

அரசியல் கட்சியினர்

இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மேலும் நாற்காலிகள் போட்டு அமர்ந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாணவர் சங்கத்தினர் பறை அடித்து பாடினர். இந்த போராட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் மற்றும் காங்கிரஸ், ம.திமு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். போராட்டம் நாளை (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

பொன்னமராவதியிலிருந்து விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வி.ஆர்.எம்.சாத்தையா தலைமையில் வாகனங்களில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஊர்வலமாக வந்தனர். 

Next Story