மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் "இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுப்போம்" கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுப்போம் என்று தேனியில் கமல்ஹாசன் பேசினார்.
தேனி,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘சீரமைப்போம் தமிழகத்தை‘ என்ற முழக்கத்துடன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கினார். இந்த பிரசாரத்துக்காக தேனி மாவட்டத்துக்கு கமல்ஹாசன் நேற்று வந்தார். ஆண்டிப்பட்டியில் அவருக்கு சாலையின் இருபுறமும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். பின்னர், தேனிக்கு வந்த அவர் என்.ஆர்.டி. நகரில் வியாபாரி ஒருவர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். அங்கிருந்து ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பங்களாமேட்டுக்கு வந்தார். அங்கு தொண்டர்கள் பலர் திரண்டு நின்று அவர் மீது பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர். அவர் திறந்தவெளி காரில் நின்றபடி கையசைத்தபடியும், வணக்கம் சொல்லியபடியும் சென்றார். அப்போது தொண்டர்கள் “நாளைய முதல்வர் நம்மவர்“, “வருங்கால தமிழகமே“ என்று கோஷங்கள் எழுப்பினர்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம்
பின்னர் பழனிசெட்டிபட்டியில் ஒரு திருமண மண்டபத்தில் பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:
பெண்களை பல வழியில் நாம் போற்றுகிறோம். அவர்களுக்கு தனித்திறமை உள்ளதை உணர்ந்தவர்கள் நாம். பலவேலை செய்யக்கூடிய திறமை பெண்களுக்கு உண்டு. ஒவ்வொரு துறையிலும் அவர்கள் சாதனையாளர்கள். இந்த மாதிரி சாதனையாளருக்கு பொதுவாக நம் வீடுகளில் ஒரு பெயர் உண்டு. அதன் பெயர் அம்மா.
ஒரு வீட்டில் அம்மாவுக்கு என்னென்ன பொறுப்புகள் என்றால், சமையல்காரி, டியூசன் டீச்சர், மதியுள்ள மந்திரி. இல்லத்தரசிகள் என்று அவர்களுக்கு கிரீடம், கையில் செங்கோல் எல்லாம் கொடுத்துவிட்டு வேறு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. ஆனால் வீட்டில் பல வேலைகளை முன்னின்று நடத்துபவர்கள் தாய்மார்கள் தான். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். இந்த கருத்தை சொன்னபோது கேலி செய்து கொக்கரித்தார்கள். இதுபற்றி மேலைநாடுகளில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நீதிமய்யம் செயல்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறது. நாங்கள் தான் அந்த யோசனையை கண்டுபிடித்தோம் என்று சொல்லவில்லை. உலகெங்கிலும் உள்ள நேர்மையான ஆண்கள், தாயை வழிபடும் ஆண்கள் எல்லாம் இதைப்பற்றி யோசித்து இருக்கிறார்கள். நாங்கள் அதில் விதிவிலக்கு அல்ல.
20 பெண் அமைச்சர்கள்
1957-ல் காமராஜர் ஆட்சியில் லூர்தம்மாள் சைமன் என்ற பெண் அமைச்சர் இருந்தார். அதன்பிறகு 63 ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போதும் 4 பெண் அமைச்சர்கள் தான் உள்ளார்கள். தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 3.1 கோடி, பெண்கள் 3.9 கோடி. பெண்கள் நினைத்தால் ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஆணித்தரமாக கூற முடியும்.
மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சியில் சமபங்கு உண்டு என்று இன்று சொல்ல முடியாவிட்டாலும், கண்டிப்பாக பெண்களுக்கு உரிய பதவி உண்டு. எங்கள் அமைச்சரவையில் குறைந்தபட்சம் 20 பெண்களாவது சாதனையாளர்களாக இருப்பார்கள். உங்கள் சவுகரியத்திற்காக அரசியல் சாக்கடை, அதில் பெண்கள் நிறையக்கூடாது என்று மிரட்டி வைத்து இருக்கிறீர்கள். அவர்கள் அல்ல அதை சாக்கடையாக்கியது.
கைக்குழந்தைகளோடு பெண்கள் தைரியமாக வரும் கட்சிக்கூட்டம் எங்கள் கட்சிக் கூட்டம் தான். கூட்டம் கலைந்து போன பின்னர், எங்கள் தொண்டர்கள் எல்லாம் நின்று குப்பைகளை பொறுக்கி எங்கே போடவேண்டுமோ அங்கு போட்டு விட்டு செல்வார்கள். கூட்டத்தையே இப்படி நடத்துபவர்கள் ஆட்சியை எப்படி நடத்துவார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இன்று பெண்கள் சுதந்திரமாக, மரியாதைக்குரியவர்களாக சமபங்குடன் செயல்படக்கூடிய ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டும் தான்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது இரண்டரை ஆண்டு ஆண் ஆள்வார், இரண்டரை ஆண்டு பெண் ஆள்வார் என்று சொன்னார். அந்த ஆள்வார் எல்லாம் இருக்கட்டும். இப்போது ஏன், கட்சியில் உங்களுக்கு பொதுச்செயலாளராக 5 பேரை போடலாமே. எங்களிடம் இருக்கிறார்கள். ஒருவேளை வேற ரிலீசுக்காக காத்திருந்து அவர் அப்படி சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்.
உலக வரலாற்றிலேயே பல புரட்சிகளை மாற்றி அமைத்தவர்கள் பெண்கள். நம் சுதந்திர போராட்டம் உள்பட. காந்தியாருக்கு உறுதுணையாகவும், தைரியமாகவும் அந்த காலத்தில் முன்வந்து நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த வீரர்களில் பலர் பெண்கள். நான் அதே மக்களிடம் கேட்கிறேன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன். பெண்கள் தைரியமாக முன்வாருங்கள். தமிழகத்தை சீரமைக்க வேண்டும் என்ற இந்த சீரிய பணியில் உங்கள் பணியை நீங்கள் அளித்தே ஆக வேண்டும். இந்த மாற்றத்தை நீங்கள் செய்து காட்டியாக வேண்டும்.
பெண் விவசாயி
விவசாயிகள் என்றால் மனதில் தோன்றுவது ஆண் உருவம் தான். அதை மாற்றியமைக்க வேண்டும். விவசாயி என்பது பெண்களும் தான். அவர்களுக்கு அதற்கான மரியாதைகளையும், அதற்காக கிடைக்கக்கூடிய பலன்களும் கிடைக்க வேண்டும். விவசாயி என்ற ஒரு பட்டயம், ஒரு சான்றிதழ் அளிக்கப்படுவது ஆண்களுக்கு மட்டுமானதாக இருக்கக்கூடாது. பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று திண்ணமாக நம்புகிறோம். அதை சட்டமாகவும் இயற்றுவோம்.
தயவு செய்து இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என்று சொல்லும் பொழுது, உங்கள் குடும்பத்திலேயே இளைஞர் இருந்தால் வழிவிடுங்கள் என்பது அல்ல. யார் இளைஞராக இருந்தாலும் அவர்களுக்கு வழிவிடுங்கள். பால் வித்தியாசம் பார்க்காமல் அவர்கள் பெண்களாக இருந்தாலும் இளைஞர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவமும், முதலிடமும் கொடுக்கும் பட்சத்தில் நாடு முன்னேறும். ஆனால், இங்கே அப்பா எம்.எல்.ஏ., மகன் எம்.பி.. அப்புறம் எப்படி நம்ம பிள்ளைகளுக்கு வழிவிடப்போகிறார்கள்?
பெண்களின் பங்களிப்பு
இங்கே நான் வந்தது பெண்கள் மனதை மாற்றுவதற்கு அல்ல. தமிழகத்தின் மனதை மாற்றுவதற்காக. அந்த மாற்றத்துக்கான எல்லா சாயல்களும் எனக்கு தெரிகிறது. அதில் பெண்களின் பங்களிப்பு எங்கள் கட்சியில் மட்டுமல்ல எங்குமே அதிகம் இருக்க வேண்டும் என்று நம்புபவன் நான்.
இது காசு கொடுத்து கூடிய கூட்டம் இல்லை. நாங்கள் இந்த மாதிரி கூட்டம் கூட்ட காசு கொடுக்கவும் மாட்டோம், காசு எடுக்கவும் மாட்டோம். எப்படியும் அரசியலுக்கு வந்து சம்பாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்கள் அல்ல நாங்கள். ஒரு சிறு கூட்டம் உங்களை நம்பி அரசியலில் இறங்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து, தேனி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். பின்னர், அல்லிநகரம், பெரியகுளம் ஆகிய இடங்களில் கமல்ஹாசனுக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி கமல்ஹாசன் சென்றார்.
Related Tags :
Next Story