சிறிய யூனியன் பிரதேசத்துக்கு 26 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேவையா? மத்திய உள்துறைக்கு கடிதம்
சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 26 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேவையா? என்பதை பரிசீலித்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி, உள்துறை செயலாளர், கவர்னர் கிரண்பெடி ஆகியோருக்கு புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
14 குடியிருப்புகள்
சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது 26 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊதியம், வாகனம், பயணப்படி என அரசு நிதி தேவையின்றி செலவிடப்பட்டு வருவதாக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
கோரிமேடு இந்திராநகரில் 14 ஐ.ஏ.எஸ். குடியிருப்புகள் உள்ளன. இதற்கான பராமரிப்பு, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் அதிகப்படியான நிதி செலவிடப்பட்டு வருகிறது. 2010 முதல் 2019 வரை 10 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 942 செலவில் வீடுகள் சீரமைத்தது, டி.வி., வாஷிங்மெஷின், பிரிட்ஜ், சோபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியது ரூ.42 லட்சத்து 81 ஆயிரத்து 776 என செலவு கணக்கு காட்டப்பட்டு மொத்தம் ரூ.2 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 718 செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நடவடிக்கை தேவை
அமைச்சர்களின் அலுவலகங்களிலேயே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சோபாக்கள் மாற்றப்படும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளுக்கு ஆண்டிற்கு ஒருமுறை பல லட்சம் செலவு செய்து வீட்டு உபயோக பொருட்களை மாற்றவேண்டிய அவசியம் என்ன? இந்த வீடுகளில் முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இப்போது யார் வசம் உள்ளது?
இதனை கண்டறிந்து தேவையின்றி அரசு நிதியை வீணடித்து வரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மிகச்சிறிய யூனியன் பிரதேசத்தில் 26 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளதால் நிதி அதிகப்படியாக செலவிடப்படுகிறது. எனவே இத்தனை பேர் தேவையா? என்பதை பரிசீலித்து கூடுதலாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story