ராமநாதபுரத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்; 54 விவசாயிகள் கைது
ராமநாதபுரத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்றும் 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 54 விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
போராட்டம்
ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் மசோதாக்களை திரும்ப பெற கோரியும், விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் மயில்வாகனன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கருணாநிதி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, காங்கிரஸ் நிர்வாகி வேலுச்சாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பேட்ரிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிநாததுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுமதி மறுப்பு
இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் அந்த உத்தரவினை மீறி நேற்றும் காலை திரண்டு வந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றதால் போலீசார் கலைந்து போகும்படி கூறினர். ஆனால், போலீசாரின் உத்தரவினை மீறி அனைவரும் அமர்ந்து கோரிக்கை முழுக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 4 பெண்கள் உள்பட 54 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
Related Tags :
Next Story